Tuesday, 13 January 2026

புதுக்கவிதை என்றால் என்ன? அவற்றின் வகைகள் யாவை?

தமிழ்க் கவிதை வகைகளில் புதுக் கவிதை ஒன்று. 20 ஆம் நூற்றாண்டில் இந்த வகை தமிழில் தோன்றியது. மேலை நாடுகளில், தொழிற் புரட்சி. பொதுவுடைமைக் கொள்கை, ஜனநாயக வாழ்க்கை முறை என்பவை காரணமாகக் கட்டுப்பாடற்ற கவிதை என்னும் புதிய வகை தோன்றியது. 

யாப்பிலக்கண மரபுகளிலிருந்து விடுதலை பெற்ற கவிதையாக (Free verse) அது அமைந்தது. உரை நடையில் அமைந்த கவிதை என்று அது அழைக்கப்பட்டது. கவிதைப் பண்புடன், உரைநடை வாக்கியங்களை உடைத்து ஒன்று சேர்த்தாற்போல அக்கவிதை அமைந்தது. இலக்கணமரபை அறியாதவர்களும், சீர், தளை, அடி என்ற யாப்பு நெறிகளுக்குள் தம் கருத்தை அமைத்துக் கவிதையாக எழுத முடியாதவர்களும், இப்புதிய வகையைப் பெரிதும் வரவேற்றனர்.

தமிழில் காலந்தோறும் பல்வேறு புதிய கவிதை வகைகள் தோன்றின. அத்துடன் வடமொழி, ஐரோப்பிய மொழிகள், ஜப்பானிய மொழி போன்ற பிற மொழிகளிலிருந்தும் கவிதை வடிவங்களைப் பெற்று, தமதாக்கிக் கொண்டனர். இந்த வகையில் மேலை நாட்டு வசன கவிதை அல்லது யாப்பு விடுதலை பெற்ற கவிதை என்னும் புதிய கவிதை தமிழில் பெரும் வரவேற்றைப் பெற்றது.

பாரதியார் வசன கவிதை மரபைத் தோற்றுவித்தார். அம்மரபு ந. பிச்சமூர்த்தி மூலம் தமிழில் பெருவழக்கைப் பெற்றது. சி.சு.செல்லப்பா. க.நா. சுப்பிரமணியம் ஆகியோர் புதுக்கவிதை என்னும் சொல்லை வழக்கில் கொண்டு வந்தனர்.

யாப்பு மரபிலிருந்து விடுபட்டுப் புதுக்கவிதை அமைந்தது. உள்ளடக்கத்தை முதன்மையாகக் கொண்டு இது அமைந்தது. சமகால வாழ்க்கை, மனித மன உணர்வு, அரசியல் என்று அனைத்தையும், புதுக் கவிதை ஏற்றது. கருத்திற்கும், உணர்விற்கும் முதலிடம் தந்தது. முரண், குறியீடு, படிமம், எள்ளல், அங்கதம் ஆகிய உத்திகளைப் புதுக்கவிதைகளில் மிகுதியும் காணலாம். 

கருத்தைச் சொல்லுவதற்கு மொழி ஒரு கருவி என்ற நிலையில், மரபுக் கவிதையிலிருந்து மாறுபட்டுப் பேச்சு வழக்குச் சொற்கள், ஆங்கிலம், வடமொழிச் சொற்கள் ஆகியவற்றைப் புதுக்கவிதை தன் நடையில் கண்டது. எனவே படிப்பவரை மிகச்சுலபமாக இது ஈர்த்தது.

புதுக்கவிதையின் வகைகள்

புதுக்கவிதை அமைப்பு அடிப்படையிலும், உள்ளடக்க அடிப்படையிலும் சில வகைகளாகப் பகுக்கப்பட்டுள்ளது. தனிக்கவிதை, நீண்ட கவிதை, கதைக் கவிதை, ஹைக்கூ, சென்ரியூ கவிதை என்று இவை அமைந்தன. புதுக்கவிதை மிகச் சிறிய அளவில் சிறு கவிதையாக அமைந்தது.

இரவிலே வாங்கினோம் 

இன்னும் விடியவே இல்லை

என்பது இதற்குச் சான்று. இரவு, விடியல் என்பவை குறியீடுகளாக அமைந்து, பொழுதையும் அதன் வழி மனிதகுல விடுதலையையும் குறிக்கின்றன. இதுபோல, ஒரு கருத்தின் வளர்ச்சியைப் பல நிலைகளில் எடுத்துக் கூறும் மிக நீண்ட கவிதைகள், உள்ளன. 

தமிழன்பனின் 'நதி விற்ற காசில் படகா?' என்பது இதற்கு மிகச் சிறந்த சான்று. தனித்த ஒரு கருத்தை மையமிட்டு அமைந்த தனிக்கவிதைகள் இவை, கதை நிகழ்வுகளைமையமாகக் கொண்டு ஒரு சுருத்தை விளக்கும் கதைக் கவிதைகளும், புதுக் கவிதையில் உள்ளன. சான்றாகச் சிற்பியின் 'ஓர் சகுந்தலா'. ஞானியின் 'கல்லிகை' போன்றவை.

ஹைக்கூ என்பது ஜப்பான் மொழியிலிருந்து அறிமுகமான வடிவம். அங்கு, ஜென் பௌத்த தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு பருவ காலத்தை வைத்துப் பாடப்படும். மூன்று அடிகள், வரையறுத்த சீர்கள் என்ற முறையில் அது இலக்கண மரபிற்கு உட்பட்டது. மூன்றாம் அடியில் சிந்திக்க வைக்கும் ஒரு கேள்வி அல்லது எள்ளல் அமைந்திருக்கும்.

 ஆனால் ஹைக்கூ தமிழுக்கு வரும்போது, பௌத்த தத்துவம், இயற்கை (பருவ காலம்) என்பவற்றையெல்லாம் விட்டு விட்டது. மிக எளிதாக நகைச்சுவைத் துணுக்கு, ஒரு செய்தி, அங்கத மரபில் ஒரு தொடர் என்ற நிலைகளில் கவிதைத் துணுக்காக ஹைக்கூ நின்றுவிட்டது. பத்திரிகைகளில் பக்கம் நிரப்பவும், படிப்பவரை அந்த நேரத்தில் சிரிக்க வைக்கவும் கூடிய கவிதையாக ஹைக்கூ அமைந்தது.

ஹைக்கூவினுடைய அடுத்த வளர்ச்சியாக சென்ரியு அமைந்தது. அங்கதம் அல்லது நகைச்சுவையோடு அமைவது இதன் தனித்தன்மை. மூன்றடி உள்ள பாடல் இது. முதல் இரு அடிகளில் ஒரு செய்தியைக் கூறி, மூன்றாம் அடியில் வரும் தொடர் அதை மறுப்பதுபோல அங்கதச் சுவையோடு அமைவது இதன் தன்மை. சான்றாக,

ஆயிரம் பேரோடு

வேட்பு மனுத்தாக்கல்

ஐம்பது வாக்குகள்'

என்னும் தமிழன்பன்கவிதை, இதை விளக்கும். சென்ரியு கவிதையும், ஜப்பானிய மொழியிலிருந்து வந்ததே. சென்ரியு கவிதை வகையும் நகைச்சுவைத் துணுக்காக ஆகி, படிப்பவரை அந்தக் கணநேரத்திற்குச் சிரிக்க வைப்பதோடு நின்று விடுகிறது. பெரும்பாலான புதுக்கவிதைகள் இந்த அளவில்தான் உள்ளன.

புதுக்கவிதையின் பகுப்பு

புதுக்கவிதை அதன் அளவு (உருவம்) நோக்கிச் சிறிய கவிதை, நீண்ட கவிதை என்று பொதுவாகப் பகுக்கப்படுகிறது. யாப்பு இலக்கண மரபுகளுக்கு உட்படாமல், யாப்பிலிருந்து விடுபட்ட கவிதை என்று புதுக்கவிதை அமைவதால் அடி வரையறை கொண்டு, சிறிய கவிதை, நீண்ட கவிதை என்று பாகுபாடு செய்ய முடியாது.

 கவிதை தான் கூற முற்படும் கருத்தை விளக்கும் அளவைக் கொண்டு தான் சிறிய, நீண்ட என்று வகைப்படுத்த முடியும். கவிதையில் இடம்பெறும் உள்ளடக்க அடிப்படையில் பாகுபாடு செய்யலாம்.

 காதல், தனி மனித உணர்வு, குடும்பம், சமூகம், அரசியல், தேசியம், அறிவியல் என்று பகுக்கலாம். இது, பெரும்பாலும் உள்ளடக்க அடிப்படையில், எல்லா இலக்கிய லக்கிய வகைகளுக்கும் படுவதாகும். திறனாய்வு செய்யப் அவர்களுடைய தேவைக்கேற்ப இவ்வாறு பகுத்துக் கொள்வர். செய்பவர் தனிக்கவிதை, கதைக் கவிதை.

குறுங்காப்பியம், காப்பியம் என்று இலக்கிய வகை அடிப்படையில் புதுக்கவிதை பகுக்கப்படுகிறது. கவிஞர் வாலி புதுக்கவிதையில் இராமாயணம்,பாரதம், இராமானுசர் வரலாறு என்பவற்றைப் படைத்தார்.

 இவை பெருங்காப்பியம் என்ற வகைக்குச் சான்று. தனிக் கவிதைகள் நிறைய உள்ளன. காப்பியம் என்ற வகையில், பல உள்ளன. எனவே இந்த வகைப்பாடு, மரபுக் கவிதையில் காணப்படும் இலக்கிய வகை அடிப்படையில் புதுக் கவிதையில் மேற்கொள்ளப்பட்டதாகும். கருத்தை வெளிப்படுத்தத் தேர்ந்த வடிவம் மரபு /புதுக்கவிதை. 

எனவே இதை மிகச் சரியான பகுப்பு என்று கூற முடியாது. இன்று, பத்திரிகைகளிலும் வாசகரிடமும் புதுக்கவிதை வரவேற்பைப் பெற்றுள்ளதால் பழைய இதிகாசக் கதைகளை மீண்டும் புதுக்கவிதையில் படைக்கின்றனர்.

உத்தி அடிப்படையில் இக்கவிதைகளை வகைப்படுத்தலாம். குறியீட்டுக்கவிதை, படிமக் கவிதை,முரண் கவிதை என்று பாகுபாடு செய்ய முடியும். குறிப்பிட்ட ஓர் உத்தியைப் பல்வேறு பாடுபொருளுக்கேற்ப எவ்வாறு ஆண்டுள்ளனர் என்று இப்பகுப்பின் மூலம் கணிக்கலாம்.

அதேபோல ஒரே உத்தியை வெவ்வேறு கவிஞர்கள் எவ்வாறு பயன்படுத்தி உள்ளனர் என்று மதிப்பிட இவ்வகைப் பகுப்பு உதவும். அதன் மூலம் ஒவ்வொருவரின் தனித்தன்மையை மதிப்பிடலாம். அடிப்படைகளில், இவ்வாறு சில குறிப்பிட்ட தேவைக்கேற்பக் புதுக்கவிதைகளைப் பாகுபாடு செய்து செய்யலாம்.

Comments


EmoticonEmoticon